![Governor Tamilisai interrupted the minister's speech](http://image.nakkheeran.in/cdn/farfuture/YVm4ZkhKTest9gqHO3FOeA9iKQWBEnNOGr03WZo3brE/1669801272/sites/default/files/inline-images/th-2_1184.jpg)
புதுச்சேரி ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் 'பிர்சா முண்டா' பிறந்தநாளை முன்னிட்டு பழங்குடியினர் கௌரவ தின விழா காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சந்திர.பிரியங்கா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்ற ஆளுநர் தமிழிசை பின்னர் செய்தியாளரிடம் பேசுகையில், “சில தினங்களுக்கு முன்பு ராணுவ வீரர் ஒருவர் வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில் 'தேச நலனுக்காக நாங்கள் எல்லையில் நாட்டை காப்பாற்ற துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் ஊருக்குள் பிரிவினை பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்' என்று ஒரு இயக்கத்தை பற்றி குறிப்பிட்டு இருந்தார். இதனை எதிர்த்து அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அந்த ராணுவ வீரரின் குடும்பத்திடம் சென்று அவரின் குடும்பத்தாரை மிரட்டி துன்புறுத்தியுள்ளனர். இது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ராணுவ வீரர்கள் எந்த விதத்திலும் விமர்சிக்கப்படக்கூடாது என்று அரசியலமைப்புச் சட்ட விதிகளிலேயே இருக்கிறது. இத்தகைய நிகழ்வுகள் தேசப்பற்றை குலைப்பதாகவும், போராடுகின்ற வீரர்களை நிந்திப்பதாகவும் இருக்கிறது.
![Governor Tamilisai interrupted the minister's speech](http://image.nakkheeran.in/cdn/farfuture/pe_UxVwBUksJZe3xr9SlQU3hafwsa0Dfbbwp3P1dU1g/1669801299/sites/default/files/inline-images/th-1_3558.jpg)
காசிக்கு சென்று தமிழ் பாடலை பாடிவிட்டு தமிழகத்தைச் சேர்ந்த மகளாக இருந்தாலும், புதுச்சேரியின் சகோதரி என்பதை அங்கே நிலைநிறுத்தி விட்டு வந்துள்ளேன். அதுமட்டுமின்றி புதுச்சேரிக்காக தேவையான உதவிகளை மத்திய அரசிடம் சென்று கேட்டு வருகிறேன். முதலமைச்சருக்கும் எனக்கும் இடையேயான உறவில் எந்தவித விரிசலும் இல்லை. பாசப்பிணைப்பு தான் இருக்கிறது" எனக் கூறினார்.
மேலும் அவரிடம், "தமிழக ஆளுநர் காலாவதியானவர் என கனிமொழி விமர்சித்திருப்பது" குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "ஆளுநர்களை பற்றி இப்படி கருத்து சொல்வதை தவிர்க்க வேண்டும். ஆளுநர்கள் சாதாரண மனிதர்கள் போலவும், மரியாதை கொடுக்க வேண்டாதவர்கள் என்பதை போலவும் எண்ணம் இப்போது இருக்கிறது. கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கிறது. அவர்கள் கருத்துக்களை சொல்லலாம். ஆனால் ஆளுநர்களை மிகவும் மோசமாக விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஆளுநர்கள் எல்லோரும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் தகுதியின் அடிப்படையில் அமர்த்தப்பட்டவர்கள். வாரிசு அடிப்படையில் அமர்த்தப்பட்டவர்கள் இல்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் நமச்சிவாயம், "ஆதிதிராவிடர் நலத்துறையை பொறுத்தவரையில் அரசு அனைவருக்கும் இலவச கல்வி தர முடிவு எடுத்துள்ளது. புதுச்சேரியில் ஆன்லைன் ரம்மி தடைக்கான கோப்புகள் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன. வெகுவிரைவில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்படும்" என்றார். அப்போது ஆளுநர் தமிழிசை, "ஆன்லைன் ரம்மி தடை மட்டுமல்ல. புதுச்சேரி மாநில மக்களுக்கான எந்தத் திட்டமாக இருந்தாலும் நான் ஒப்புதல் தருகிறேன். அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை" என்று குறுக்கிட்டுக் கூறினார்.