கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவால் கடந்த 17 நாட்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் கடந்த செவ்வாய்கிழமை முடிவுக்கு வந்தது.
கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான நான்கு நாள் விவாதத்திற்கு பிறகு கடந்த செவ்வாய்கிழமை மாலை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.க கூட்டணி ஆட்சிக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவானதால், முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
இதனையடுத்து பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் பல்வேறு குழப்பங்கள், கூட்டங்களுக்கு பின் இன்று எடியூரப்பா பாஜக சார்பில் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இந்த சூழலில், இன்று முதல் மந்திரியாக பதவியேற்கும் எடியூரப்பா வரும் 31-ம் தேதிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் கெடு விதித்துள்ளார்.