













நாடு முழுவதும் குடியரசுத் தின விழா இன்று (26/01/2022) சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பழமையான கட்டிடங்கள் உள்ளிட்டவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் ஆளுநர்களும், டெல்லியில் குடியரசுத்தலைவரும் தேசியக் கொடியேற்றி வைத்தனர்.
அந்த வகையில், தெலங்கானா, புதுச்சேரி ஆகிய 2 மாநிலங்களில் தேசியக் கொடியேற்றினார் துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன். தெலங்கானா ஆளுநர் புதுச்சேரிக்கு பொறுப்பு ஆளுநராக உள்ளதால் 2 இடங்களில் தேசியக் கொடியேற்றி மரியாதைச் செலுத்தினார். தெலங்கானாவில் தேசியக் கொடியேற்றிய ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தனி விமானம் மூலம் புதுச்சேரி வந்து மரியாதைச் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் நடந்த குடியரசுத் தின கொண்டாட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் உரையாடிய ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.