Skip to main content

சபரிமலை விவகாரம் - கேரள அமைச்சர் சர்ச்சை பேச்சு!

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வழிபட அனுமதி இல்லை என்ற நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றி வருகிறது. இந்த மரபை உடைக்கும் வகையில், அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 28 -ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனிடையே, உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, 56 மறுசீராய்வு மனுக்கள், 4 ரிட் மனுக்கள் உட்பட மொத்தம் 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது. 

இதையடுத்து, வழக்கம்போல் இத்தீர்ப்புக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்த நிலையில், சபரிமலைக்கு வரும் பெண்களின் பாதுகாப்பு குறித்து அந்த மாநில அமைச்சர் சுரேந்திரன் இன்று கூறியுள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "சபரிமலைக்கு வரும் எந்த பெண்களுக்கும் கேரள மாநில அரசு பாதுகாப்பு தர இயலாது. திருப்தி தேசாய் போன்ற சமூக ஆர்வலர்கள், தங்களது வலிமையை காட்டுவதற்கான இடம் சபரிமலை அல்ல. அரசின் இந்த எச்சரிக்கையையும் மீறி, திருப்தி தேசாய் போன்றவர்கள் சபரிமலைக்கு வந்து செல்ல போலீஸ் பாதுகாப்பு கோரினால், அதற்கான உத்தரவை அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் இருந்து தான் பெற்று வர வேண்டும்" என அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 

சார்ந்த செய்திகள்