Skip to main content

‘முதல்வன்’ படப் பாணியில் அரசு எடுத்த புதிய முயற்சி! அரியணையை அலங்கரித்த 11ஆம் வகுப்பு மாணவி

Published on 02/03/2023 | Edited on 02/03/2023

 

  government school student who became collector for one day in Puducherry

 

புதுச்சேரி அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மக்கள் பணிகள் செய்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'மாவட்ட ஆட்சியருடன் ஒரு நாள்' என்ற நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணி நேற்று தொடங்கப்பட்டது. அதன்படி புதுச்சேரி கதிர்காமம் அரசு மேல்நிலைப் பள்ளியைச்  சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா ஒரு நாள் மாவட்ட ஆட்சியராகப் பணிக்கு அமர்த்தப்பட்டார்.

 

மாணவி ஐஸ்வர்யா காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தவுடன் அவருக்கு சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் வரவேற்று அவரது இருக்கையில் அமர வைத்து அலுவல் பணிகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும், தினந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் கோப்புகள் மற்றும் புகார் மனுக்களை எப்படிக் கையாள்வது என்பது குறித்தும், மனுக்களைக் கொடுக்க வரும் பொதுமக்களிடம் எப்படி கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் விளக்கம் அளித்தார்.

 

தொடர்ந்து நகர பகுதியில் பல்வேறு இடங்களுக்கு மாவட்ட ஆட்சியருடன் காரில் புறப்பட்ட ஒரு நாள் மாவட்ட ஆட்சியர் ஐஸ்வர்யா புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து சட்டப்பேரவை அலுவலகம் வந்த ஒரு நாள் மாவட்ட ஆட்சியர் ஐஸ்வர்யாவை சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் சால்வை அணிவித்து வரவேற்று நினைவுப் பரிசு வழங்கினார். தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள சட்டசபை மைய மண்டபத்திற்கு சென்று அங்கே நடைபெறும் சட்டசபை நிகழ்வுகள் குறித்தும், முதலமைச்சர் அமரும் இடம், எதிர்க்கட்சித் தலைவர் அமரும் இடம் ஆகியவை குறித்தும் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் விளக்கி கூறினார்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் மணிகண்டன், “அரசு செயல்படுத்தும் மக்கள் நலப்பணிகள் குறித்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'ஆட்சியருடன் ஒரு நாள்' என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி மாணவி ஐஸ்வர்யா ஒரு நாள் மாவட்ட ஆட்சியராகப் பணியமர்த்தப்பட்டு அவருக்கு பல்வேறு பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது” என்றார்.

 

தொடர்ந்து பேசிய ஒரு நாள் மாவட்ட ஆட்சியரான மாணவி ஐஸ்வர்யா, “இன்று ஒரு நாள் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்று பணிபுரிந்தது மறக்க முடியாத நிகழ்வு. சாதாரண பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்தும், நில அபகரிப்பு புகார்கள் குறித்தும், ஸ்மார்ட் சிட்டி சம்பந்தமான பணிகளையும் ஆய்வு செய்தேன். நன்றாகப் படித்து மாவட்ட ஆட்சியராகி மக்கள் பணி செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம். ஏதோ மாவட்ட ஆட்சியர் என்றால் கையெழுத்திடுவது மட்டும் அவருடைய வேலை அல்ல, நிறைய மக்கள் பணி உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. மேலும், மக்களிடம் எவ்வாறு கனிவோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதை மாவட்ட ஆட்சியரைப் பார்த்து தான் அறிந்து கொண்டேன்" எனக் கூறினார். இதனையடுத்து பாதுகாவல் பணிக்கு வந்த காவலர் காரின் கதவைத் திறக்க, உள்ளே அமர்ந்த மாணவி மாவட்ட ஆட்சியருடன் புறப்பட்டுச் சென்றார்.

 

 

சார்ந்த செய்திகள்