இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் அதிகம் கரோனா பாதித்த மாநிலங்களில் உத்தரப்பிரதேசமும் ஒன்று. மேலும் அங்கு கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நேற்று முன்தினம் உத்தரப்பிரதேச ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்த வழக்கு விசாரணையின் போது, ஆக்சிஜன் இல்லாமல், மக்கள் இறப்பது இன அழிப்புக்கு சற்றும் குறைவானது அல்ல எனக் கூறியிருந்தது நீதிமன்றம்.
இந்தநிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கரோனாவிலிருந்து பசுக்களைப் பாதுகாக்க 'பசு உதவி மையம்' அமைக்கவும், பசு மாட்டுப் பண்ணைகளில், பசுக்களுக்கு ஆக்சிஜன் அளவைக் கண்காணிக்க ஆக்சிமீட்டர் வழங்கவும், பசுக்களுக்கு ஸ்கேன் எடுக்க தெர்மல் ஸ்கேனர்களை வழங்கவும் அம்மாநில அரசு உத்தரவிட்டதாகச் செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து, இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, சமூக வலைத்தளங்களில் பெரும் கேலிக்கு உள்ளாக்கப்பட்டது. இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உத்தரப்பிரதேச அரசு விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய உத்தரப்பிரதேச அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் (தகவல் துறை), பசுக்களுக்கு ஆக்சிமீட்டர் மற்றும் தெர்மல் ஸ்கேனர்களை பயன்படுத்துமாறு உத்தரப்பிரதேச அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றும், மாட்டுப் பண்ணைகளில், அங்கு வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்காக ஆக்சிமீட்டரோடு கூடிய உதவி மையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.