கரோனா நோய்த்தொற்று காரணமாக, பழம்பெரும் பின்னணி பாடகி பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் (வயது 92) மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் சுமார் ஒரு மாதமாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (06/02/2022) காலை 08.12 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
லதா மங்கேஷ்கர் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ஆர்.கே.சிங், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவையடுத்து, தேசிய அளவில் இன்று (06/02/2022), நாளை (07/02/2022) துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். லதா மங்கேஷ்கர் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
குடியரசுத்தலைவர் மாளிகை, பிரதமர் அலுவலகம் மற்றும், உச்சநீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.