முந்தைய காலங்களில் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட அல்லது புதையுண்ட தங்க புதையல்கள், நிலத்தை தோண்டும்போது கிடைப்பது வழக்கம். அவ்வாறு கிடைத்த புதையலுக்கு கிராம மக்கள் தேங்காய் உடைத்து வழிபாடும் நடத்தியுள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் பெம்பார்த் கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிங்கா. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், தனது 11 ஏக்கர் நிலைத்தை ஜே.சி.பி மூலம் சமன்படுத்தும் வேலையை செய்துள்ளார். அப்போது மண்ணுக்கடியில் புதையுண்டிருந்த புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் புதையலில் 22 தங்க தோடுகள், 11 தங்கத்தாலான தாலிகள், 51 தங்க மணிகள் என 189.820 கிராம் தங்க ஆபரணங்களும், 1.727 கிலோ வெள்ளி பொருட்களும் செப்பு பானையில் இருந்துள்ளன.
நிலத்தில் புதையல் கண்டெடுக்கப்பட்ட தகவல் பரவியதும் அங்கு கூடிய கிராம மக்கள், பழங்கால கோயிலின் அம்மனுக்குச் சொந்தமான நகைகளாக இருக்கலாம் என கருதி, தேங்காய் உடைத்து, ஊதுபத்திகள் கொளுத்தி, மலர் தூவி வழிபாடு நடத்தினர். பின்னர் இதுதொடர்பாக தகவலறிந்த மாவட்ட அதிகாரிகள், புதையலைக் கைப்பற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றதுடன், அந்தப் பகுதியில் மேலும் புதையல்கள் உள்ளதா என ஆய்வு நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தப் புதையல் கி.பி. 1083 முதல் 1323 வரை ஆந்திராவை ஆண்ட காகதியா அரசர்கள் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும், இதுகுறித்து ஆய்வு நடத்தப்படும் எனவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.