கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஆண்டு பா.ஜ.க ஆட்சியின் போது, உடுப்பி மாவட்டத்தின் ஒரு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் காவி துண்டை அணிந்துகொண்டு வந்தனர். இதனால், தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பிறகு இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்று, தற்போது வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, காங்கிரஸ் பொறுப்புக்கு வந்தபிறகு ஹிஜாப் தடை நீக்கப்படும் என அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், கர்நாடகா சம்பவம் போல் மும்பை மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியிலும் அரங்கேறியுள்ளது. மும்பை செம்பூரில் என்.ஜி. ஆச்சார்யா மற்றும் டி.கோ. மராத்தா எனும் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரிக்கு நேற்று அனைத்து மாணவர்களும் வழக்கம் போல் வந்தனர். அப்போது, திடீரென ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படாமல் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இது தொடர்பாக, இஸ்லாமிய மாணவிகள் தங்களுடைய பெற்றோர்களுக்குத் தெரிவித்து, கல்லூரிக்கு வரவழைத்தனர். இதையடுத்து, இஸ்லாமிய மாணவிகளும், அவர்களுடைய பெற்றோர்களும் கல்லூரி வாசல் முன் நின்று போராட்டம் நடத்தினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதனால், அந்த கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக, தகவல் அறிந்து கல்லூரிக்கு வந்த காவல்துறையினர், கல்லூரி வாசலில் இருந்த பாதுகாவலரிடம் முதலில் விசாரித்தனர். அப்போது அவர், “கல்லூரி நிர்வாகம் தான் ஹிஜாப் அணிந்து வருபவர்களை உள்ளே விட வேண்டாம் என்று தெரிவித்தனர். அதனால் நான் தடுத்து நிறுத்தினேன்” என்றார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர், கல்லூரி முதல்வரிடம் இது தொடர்பாக விசாரித்தனர். அதில் அவர், “கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. அதனால், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.