
பிரதமர் மோடி மாதந்தோறும் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை “மன் கி பாத்” (மனதின் குரல்) என்ற பெயரில் நாட்டு மக்களிடையே வானொலி மூலம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இந்த ஜூன் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி அமெரிக்க சுற்றுப்பயணம் செல்லவுள்ளதால் மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அதில் பேசிய மோடி, “நாங்கள் ஜனநாயகக் கொள்கைகளை முதன்மைப்படுத்தவும் அரசியலமைப்பு சட்டத்தை உச்சமாகவும் கருதுகிறோம். அதனால் தான் ஜுன் 25 ஆம் தேதி ஒரு போதும் மறக்க முடியாத நாளாக இருக்கிறது. ஏனென்றால் இந்த நாளில் தான் இந்தியாவில் அவசர கால சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த நாளை இந்திய வரலாற்றில் ஒரு இருண்ட காலமாக கருதுகிறேன்.
இந்த எமர்ஜென்ஸி காலத்தை லட்சக்கணக்கான மக்கள் தங்களது முழு பலத்தை கொண்டு எதிர்த்தார்கள். அந்த எமர்ஜென்ஸி காலத்தில் ஜனநாயகத்தை ஆதரிப்பவர்களை பல சித்ரவதைகள் செய்தனர். அவர்கள் எத்தனை துன்பங்கள் அனுபவித்தார்கள் என்பதை நினைக்கும் போது இன்றும் நம்மை நடுங்க வைக்கிறது. மேலும், எமர்ஜென்ஸி காலத்தில் காவல்துறையைக் கொண்டும் அரசு நிர்வாகத்தைக் கொண்டும் நடத்தப்பட்ட அட்டூயழிங்கள், தண்டனைகள் குறித்தும் பல்வேறு புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன.
அந்த நேரத்தில் தான் “சங்கர்ஸ் மேன் குஜராத்” என்ற புத்தகம் எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சில நாட்களுக்கு முன்பு கூட எமர்ஜென்ஸி குறித்து வேறொரு புத்தகத்தை பார்த்தேன். அந்த புத்தகம், “இந்தியாவில் அரசியல் கைதிகளின் சித்ரவதை” என்று எமர்ஜென்ஸியின் போது ஜனநாயகத்தின் பாதுகாவலர்களை அரசு எவ்வளவு கொடூரமாக நடத்தியது என்பதை விவரிக்கிறது. மேலும் இந்த புத்தகத்தில் ஏராளமான ஆய்வுகளும், நிறைய படங்களும் இருக்கின்றன. இன்று நாம் சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவை கொண்டாடும் வேளையில் தான் தேசத்தின் சுதந்திரத்தையே ஆபத்துக்குள்ளாக்கிய எமர்ஜென்ஸி போன்ற குற்றங்கள் குறித்தும் நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். இதன் மூலம் இன்றைய இளைய தலைமுறைகள் ஜனநாயகத்தையும், அதன் மகத்துவத்தையும் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்.
யோகாவை உங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக கடைப்பிடியுங்கள். யோகாவை உங்கள் வாழ்வில் அன்றாட செயல்பாட்டின் ஒன்றாக ஆக்கிக் கொள்வதே எனது வேண்டுகோள். இதுவரை நீங்கள் யோகாவை கடைப்பிடிக்கவில்லை என்றால் வரவிருக்கும் யோகா தினமான ஜுன் 21 ஆம் தேதி அன்று நீங்கள் தீர்மானம் எடுத்துக்கொள்ள மிகவும் அருமையான சந்தர்ப்பம். யோகா கலையை கற்றுக்கொள்ள நீங்கள் கஷ்டப்பட வேண்டியதில்லை. யோகாவோடு இணையும் போது உங்கள் வாழ்க்கையில் எத்தனை மாற்றங்கள் ஏற்படும் என்பதை நீங்களே அனுபவித்து உணருங்கள்” என்று கூறினார்.