மத்தியப்பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுமியை மீட்கும் பணி இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
மத்தியப்பிரதேசம் மாநிலம் சேகோர் மாவட்டத்தில் முங்காவல்லி என்னும் கிராமத்தில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 2 1/2 வயது சிறுமி ஷிஷ்டரி அருகில் இருந்த 300 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தார். தொடர்ந்து தேசிய மீட்பு படையினர், மாநில காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் குழந்தையை மீட்கும் பணியில் இரண்டாவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுமி இருக்கும் ஆழ்துளை கிணற்றுக்குள் ஆக்சிஜன் வாயுவானது தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் 30 அடி ஆழத்திலிருந்த சிறுமி தற்போது 50 அடிக்கு மேல் சென்று விட்டதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆழ்துளை கிணற்றின் அருகே குழி தோண்டி சிறுமியை மீட்கும் பணிகள் ஒருபுறம் நடந்து வருகிறது. தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மணப்பாறை அருகே இதேபோல் சிறுவன் ஒருவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த நிலையில் சில நாட்கள் மீட்புப் பணிகளுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தகுந்தது.