ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் 110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை கண்டிவாலி பகுதியைச் சேர்ந்தவர் ஜிகர் ஷா. இவர் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர். இவருக்கு ரூபா ஷா என்பவருடன் திருமணமாகி இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் கிரிஷா (16) 11 ஆம் வகுப்பு படிக்கிறார். இவர் முதலில், 16 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கத் திட்டமிட்டு சாதனை படைக்க இருந்தார். 16 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து முடிவடைந்த நிலையில், அவரது உடலில் எந்தவித பிரச்சனையும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டது. அதனால், அவரது ஆன்மீக குருவின் அறிவுரையின் படி 31, 51, 71 என நாட்களைத் தொடர்ந்து தனது உண்ணாவிரதத்தை நீடித்துள்ளார். இறுதியில், 110 நாட்கள் தனது உண்ணாவிரதத்தை முடித்து சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி உண்ணாவிரதத்தைத் தொடங்கிய கிரிஷா, 110 நாட்கள் உண்ணாவிரதத்தை முடித்துவிட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இந்த உண்ணாவிரதத்தில் எனது எடை 18 கிலோ குறைந்துள்ளது. மன ஒருமைப்பாட்டுடன் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை எனது உண்ணாவிரதம் எடுத்துக்காட்டியுள்ளது” என்று தெரிவித்தார். கிரிஷாவின் சாதனை குறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், “கிரிஷா, அவரது ஒன்பது வயதில் 8 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தும், அவரது 14 வயதில் 16 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தும் சாதனை படைத்துள்ளார்” என்றனர்.
கிரிஷா, தனது உண்ணாவிரத காலத்தில் காலை 9 மணி முதல் மாலை 6:30 மணி வரை வெறும் காய்ச்சிய தண்ணீர் மட்டுமே பருகுவார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கிய பிறகு மன வலிமை பெற மத நூல்கள் மற்றும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு முழு கவனம் செலுத்தி வந்துள்ளார். இவரது சாதனை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.