தன்னைக் கொன்றவனின் முகத்தை தெளிவாக பார்த்த கௌரி லங்கேஷ்!
கௌரி லங்கேஷ் தன்னைக் கொன்றவனின் முகத்தை தெளிவாக பார்த்திருக்கிறார் என சிறப்பு புலனாய்வு பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 5ம் தேதி மூத்த பத்திரிகையாளரும், தீவிர இந்துத்துவ எதிர்ப்பாளருமான கைரி லங்கேஷ் பெங்களூருவில் வைத்து மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தார். இது நாடுமுழுவதும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியை எழுப்பி, இன்றுவரை போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில், கௌரி லங்கேஷ் கொலைகுறித்து விசாரணை நடத்த, கர்நாடக மாநில அரசு சிறப்பு புலனாய்வு பிரிவை அமைத்தது. அந்த விசாரணைக்குழு தற்போது சில முக்கியத்தகவல்களை வெளியிட்டுள்ளது. கௌரி லங்கேஷ் கொல்லப்பட்ட அன்று பதிவான சிசிடிவி காட்சிகளை மையமாக வைத்து இந்த விசாரணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தன் வீட்டிலிருந்து வெளியே வரும் கௌரி லங்கேஷ், வீட்டு வாசலில் நின்றபடி துப்பாக்கியுடன் நிற்கும் நபரைப் பார்க்கிறார். அவரிடம் நெருங்கி வரும் அந்த மர்மநபர், முதல்முறையாக சுட்ட குண்டு கௌரியின் விலா பகுதியில் பாய்கிறது. இரண்டாவது குண்டு விலா எலும்பு பகுதியில் பாய்கிறது. இதில் அதிர்ச்சியடைந்த கௌரி இரண்டடி பின்னே நகர்ந்து திரும்ப முயற்சிக்கிறார். அதேநேரம் அந்த மர்மநபர் மேலும் முன்னே நகர்ந்து கௌரியை நோக்கி சுடுகிறான். மூன்றாவது குண்டு குறிதவறுகிறது. நான்காவது குண்டு கௌரியின் முதுகில் பாய்ந்து, இதயப்பகுதியைத் துளைத்துக்கொண்டு வெளியேறுகிறது. இந்த மூன்றாவது குண்டு பாய்ந்த அடுத்த 30 - 60 விநாடிகளில் கௌரியின் உயிர் பிரிகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவத்தின்போது கௌரி தன்னைக் கொன்ற மர்மநபரின் முகத்தை தெளிவாக பார்த்துள்ளார் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ச.ப.மதிவாணன்