மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2.08 ரூபாயும், மானியமில்லா சிலிண்டர் விலை 42.50 ரூபாயும் உயருவதாக இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து சமைல் கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்ட நிலையில், இப்போது உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மானிய விலை 14.2 கிலோ சிலிண்டர் விலை சென்னையில் 483.49 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது. அதேபோல் மானியமில்லா 14.2 கிலோ சிலிண்டர் விலை சென்னையில் 717 ரூபாய் என விற்கப்படுகிறது.
ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக 12 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. விலை உயர்வுக்குக் காரணம் கூறியுள்ள பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில், கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் வரித் தாக்கம் போன்றவையே காரணமென கூறியுள்ளது.
இதற்கு முன்பு, மானிய சிலிண்டர் விலை கடந்த ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி ரூ.6.52 பைசாவும், ஜனவரி 1-ஆம் தேதி ரூ.5.91 பைசாவும், பிப்ரவரி மாதம் ரூ.1.46 பைசாவும் குறைக்கப்பட்டன.
அதேபோல் மானியமில்லாத சிலிண்டர் விலை கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி சிலிண்டருக்கு ரூ.133, ஜனவரி 1-ஆம் தேதி சிலிண்டருக்கு ரூ.120.50 குறைக்கப்பட்டது, கடந்த மாதம் ரூ.30 குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.