நவராத்திரி விழா என்றாலே அதிகம் களைகட்டுவது வடமாநிலங்கள் தான். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் வடமாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வெகு விமர்சையாக நவராத்திரி விழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்த நவராத்திரி விழாக்களில் முக்கியமாக இடம் பெறுவது 'கார்பா' நடனம்.
குஜராத்தை பிறப்பிடமாகக் கொண்ட கார்பா நடனம் விடிய விடிய ஆடும் ஒரு வகை நடனமாகும். பாரம்பரிய ஆடைகளுடன் ஆண்கள் பெண்கள் என அனைவரும் இசைக்கு ஏற்ப இடைவிடாமல் விடிய விடிய நடனமாடுவர். இந்த நிகழ்ச்சிக்கு குஜராத் மாநிலத்தில் பெரும் வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் அண்மையில் குஜராத்தில் பரோடா மாவட்டத்தில் 'கார்பா' நடனம் ஆடிய 13 வயது சிறுவன் உட்பட 10 பேர் மாரடைப்பால் ஒரே நாளில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த 10 பேரில் 13 வயது சிறுவன் தவிர மற்ற ஒன்பது பேரும் நடுத்தர வயது கொண்டோர் மற்றும் இளைஞர்கள் என்பது தெரிய வந்துள்ளது. நவராத்திரி விழா தொடங்கிய முதல் ஆறு நாட்களில் மாரடைப்பு தொடர்பாக 521 அழைப்புகளும், மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவ சேவைக்காக 108 ஆம்புலன்ஸ் வேண்டும் என 609 அழைப்புகளும் வந்துள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் 'கார்பா' நடன நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அம்மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு 'கார்பா' நிகழ்ச்சியில் மூன்று பேர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு அதன் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.