ஜெயின்ட் வீல் எனும் ராட்சத ராட்டினத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக 10 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் மாநிலம் அனந்தாபூர் பகுதியில், பொதுமக்கள் கோடை விடுமுறைக் காலத்தை கழிப்பதற்காக பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு வகையான ராட்டினங்களும் பொதுமக்களின் கேளிக்கைக்காக நிறுவப்பட்டுள்ளன.
அவற்றில் ஜெயின்ட் வீல் ரக ராட்டினத்தில் ஏராளமானோர் ஆர்வமுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, இந்த கோர விபத்து அரங்கேறியுள்ளது. ராட்டினத்தின் ஒரேயொரு பெட்டி மட்டும் தனியாக கழன்று விழுந்ததில் அதில் இருந்த அனைவரும் படுகாயமடைந்தனர். விபத்தில் சிக்கிய 10 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. ராட்டினத்தில் விபத்துக்குள்ளான பெட்டியில் இருந்தவர்கள் கீழே குதிக்கும் காட்சிகள் அங்கிருந்தவர்களால் படமாக்கப்பட்டுள்ளது.
விபத்து நடப்பதற்கு சிறிதுநேரத்திற்கு முன்பாக, பெட்டிகளில் பழுது இருப்பதை பொதுமக்கள் அறிவுறுத்தியும் கண்டுகொள்ளாமல் விட்டதே விபத்துக்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், குடிபோதையில் இருந்த ராட்டினத்தை இயக்கும் நபருக்கு தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.