டெல்லியில் இன்றும், நாளையும் என இரு நாட்கள் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில் ஜி20 மாநாடு நடைபெறவுள்ள டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்திற்கு வருகை தரும் உலகத் தலைவர்களை, ஒடிசாவின் புகழ்பெற்ற கோனார்க் சக்கரத்தின் பின்னணியில் இருக்கும்படி சிவப்பு கம்பளத்தில் நின்று பிரதமர் மோடி வரவேற்று வருகிறார். அந்த வகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோரை வரவேற்றார்.
மேலும், சீன பிரதமர் லீ கியாங், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் ஆகியோரையும் பிரதமர் மோடி வரவேற்றார்.