அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, இந்தியா உட்பட 20 நாடுகள் உள்ளடக்கிய அமைப்பாக ஜி20 உள்ளது. உலகின் சக்தி வாய்ந்த அமைப்பான ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு கடந்த மாதம் இந்தோனேசியாவில் நடைபெற்றது. இதில் ஜி20 அமைப்பின் விதிமுறைகளின்படி இந்த ஆண்டு ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 2023ஆம் ஆண்டில் ஜி20 நாடுகளின் மாநாடு இந்தியா தலைமையில் நடைபெற உள்ளது. இதில் ஜி20 யின் முதல் மாநாடு ஜனவரி மாதம் 30, 31 ஆகிய தேதிகளில் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. அதற்காக ஜி20 பதிக்கப்பட்ட லோகோ, பேட்ச், செல்பி ஸ்டேன்ட் மற்றும் சுவரொட்டிகள் ஆகியவை காட்சிப்படுத்தும் நிகழ்ச்சி புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே நேற்று நடைபெற்றது.
இதில் துணை நிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு ஜி20 லோகோவை அறிமுகப்படுத்தி வைத்தார்கள். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை, "ஜி20 மாநாடு இங்கு நடைபெறுவது இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் நிகழ்வாகும். ஜி20 அமைப்பில் உள்ள 20 நாடுகள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளைச் சார்ந்த உலகத் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள். அத்தகைய மாநாடு புதுச்சேரியில் நடத்த வாய்ப்பு கிடைத்திருப்பது பெருமையாக உள்ளது. இங்குள்ள பாரம்பரிய நடனங்களான பரதநாட்டியம், மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்றவற்றை உலகத் தலைவர்கள் கண்டுகளிக்க உள்ளார்கள்" என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, "ஜி20 மாநாடு புதுச்சேரியில் நடைபெறுவது பெருமையாக உள்ளது. இந்த மாநாட்டைச் சிறப்பாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். உலகத் தலைவர்கள் புதுச்சேரிக்கு வந்து பாரம்பரிய கட்டடங்கள், கைவினைப் பொருட்கள், அழகிய கடற்கரையைச் சுற்றிப் பார்க்க இது ஒரு அருமையான சந்தர்ப்பம்" எனக் கூறினார்.