அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச 'ஸ்மார்ட் போன்' வழங்குவதற்கு, பஞ்சாப் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் முதல்வராக அம்ரீந்தர் சிங் உள்ளார். இந்நிலையில் முதல்வர் அம்ரீந்தர் சிங் தலைமையில் நேற்று (19/09/2019) மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு உயர்நிலை பள்ளிகளில் பயிலும் 11- ஆம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச 'ஸ்மார்ட் போன்' வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதன்படி, முதல் கட்டமாக நடப்பு கல்வியாண்டு முதல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை பள்ளிகளில் படிக்கும் 11- ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு 'ஸ்மார்ட் போன்' வழங்கப்படும் என்றும், இந்த திட்டம் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கும் வரும் என்று பஞ்சாப் மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் 'ஸ்மார்ட் போன்' இல்லாத மாணவிகளுக்கு மட்டுமே, அரசின் இலவச 'ஸ்மார்ட் போன்' வழங்கப்படும் என்று அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாகவும் பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பள்ளி மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.