இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டி நேற்று (24.10.2021) நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, அபார வெற்றி பெற்றது. உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும்.
இந்தநிலையில், பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் உள்ள பாய் குருதாஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரியில், இந்திய அணி தோல்வியடைந்ததையடுத்து, காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்களை உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்த சிலர் இரும்பு கம்பிகளால் தாக்கியதாக கூறப்படுகிறது.
காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்பட்டதை ஒரு மாணவர் ஃபேஸ்புக்கில் நேரலை செய்ததாகவும், பின்னர் பஞ்சாப் மாணவர்கள் குறுக்கிட்டு காஷ்மீர் மாணவர்களை தாக்கியவர்களை தடுத்து நிறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து, பஞ்சாப் காவல்துறை பாய் குருதாஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரிக்கு விரைந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.