ரூபாய் 2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டியில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக, பொது மக்கள் வங்கியில் பெற்றக் கடன்களுக்கான மாத தவணைகள் ஆகஸ்ட் 31- ஆம் தேதி வரை செலுத்த தேவையில்லை என மத்திய நிதியமைச்சகம் அறிவித்தது.
இந்த நிலையில், ஊரடங்கு காலத்தில் வங்கியில் பெறப்பட்ட கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூலிப்பதை ரத்து செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை ரத்து செய்யமுடியாது என மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தெரிவித்திருந்தது. இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசை கேட்டுக்கொண்டிருந்தது. மேலும், மாத தவணையை செப் 30- ஆம் தேதி வரை செலுத்த தேவையில்லை என்று காலக்கெடுவை நீட்டித்து, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
இந்த நிலையில், வட்டிக்கு வட்டி விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள முன்னாள் தலைமை கணக்கு அதிகாரி தலைமையில் குழு அமைத்தது மத்திய அரசு. அதைத்தொடர்ந்து ஆய்வு செய்த குழு அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
குழுவின் அறிக்கையை ஏற்ற மத்திய அரசு, வட்டிக்கு வட்டி வசூலிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது.
அதில், 'கரோனா காலத்தில் ஒத்திவைக்கப்பட்ட கடன் மாத தவணைக்கு ரூபாய் 2 கோடி வரை வட்டிக்கு வட்டியில்லை, வட்டிக்கு வட்டி வசூலைத் தள்ளுபடி செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கடன், தனி நபர் கடன், கல்விக்கடன், வாகனக்கடனுக்கான மாத தவணை வட்டிக்கு வட்டி வசூல் இல்லை. சிறு, குறு, தொழில் கடன், கிரெடிட் கார்டில் கடன் பெற்றவர்களுக்கும் வட்டிக்கு வட்டி வசூல் இல்லை. மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 6 மாதங்களில் சரியாக தவணை செலுத்தியவர்களுக்கும் வட்டிக்கு வட்டி வசூல் செய்யப்படமாட்டாது' என குறிப்பிட்டுள்ளது.