இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கரோனா தடுப்பூசி தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மாநிலங்களவையின் கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே பதிலளித்தார்.
அப்போது அவர், "இந்தியாவில் இதுவரை 47 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. மொத்த நாட்டிற்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் 7 முதல் 9 சதவீத தடுப்பூசிகள் அரசு தடுப்பூசி மையத்தில் பயன்படுத்தப்படுகிறது" எனக் கூறியுள்ளார்.
மேலும், தடுப்பூசி செலுத்தும் திட்டம் சுமுகமாகச் செல்வதாகத் தெரிவித்துள்ள மன்சுக் மாண்டவியா, "அக்டோபர் முதல் நவம்பருக்குள் மேலும் நான்கு இந்தியத் தடுப்பூசி நிறுவனங்கள், உள்நாட்டுத் தடுப்பூசிகளைத் தயாரிக்கத் தொடங்கும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது. அது உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய உதவும். பயோலொஜிக்கல் - இ, நோவார்டிஸ் தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும். ஸைடஸ் காடிலா தடுப்பூசி விரைவில் நிபுணர் குழுவிடமிருந்து விரைவில் ஒப்புதலைப் பெறும்" எனவும் கூறியுள்ளார்.