நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் இது தொடர்பாக விசாரிக்க ராகுல்காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனையடுத்து பேரணியாக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்று விசாரணைக்கு ராகுல்காந்தி ஆஜரானார். அதனைத் தொடர்ந்து ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறையைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையிலும், புதுச்சேரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் போலீசாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. டெல்லியில் அமலாக்கத்துறையைக் கண்டித்து பேரணியாக சென்ற காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் பேரணியில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எலும்புமுறிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. பேரணியைத் தடுக்க முயன்ற காவல்துறையினர் தள்ளிவிட்டதில் ப.சிதம்பரத்திற்கு விலா எலும்பில் சிறு எலும்பு முறிவு ஏற்பட்டது. 'முரட்டுத்தனமான காவலர்கள் மோதும்போது மிக லேசான எலும்பு முறிவு ஏற்பட்டு தப்பித்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி'' என இதுகுறித்து ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் 'எனக்கு மிக லேசான எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மிக லேசான எலும்பு முறிவு எனில் பத்து நாட்களில் சரியாகி விடும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். நான் நலமாக இருக்கிறேன். எனது அன்றாட பணிகளை பார்க்க உள்ளேன்' எனவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.