முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி அருண் ஜெட்லி உயிரிழந்தார்.
இதனையடுத்து அருண் ஜெட்லியின் உடல் அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலிக்காக கைலாஷ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அருண் ஜெட்லியின் உடல் இன்று காலை 10.00 மணியளவில் தீன்தயாள் உபாத்யாய் சாலையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன் பின்னர் அருண் ஜெட்லியின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மாலை 03.00 மணியளவில் நிகம்போத் கட்டில் முழு அரசு மரியாதையுடன் அருண் ஜெட்லியின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது. இறுதி சடங்கு நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நேரில் சென்று அருண் ஜெட்லியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு ஜெட்லியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அதேபோல் பாஜக கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா அருண் ஜெட்லியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். மத்திய அரசு சார்பில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அருண் ஜெட்லியின் உடலுக்கு நேரில் மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் ஜெட்லியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு ஜெட்லியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஜெட்லியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் ஜெட்லியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.