ஆறுபேரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற முன்னாள் இராணுவ வீரர்!
ஹரியானா மாநிலத்தின் பல்வால் பகுதியில், அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த நள்ளிரவு வேளையில் மர்ம நபர் கையில் இரும்புக் கம்பியுடன் சுற்றித் திரிந்திருக்கிறார். அந்த நேரத்தில் தன் கண்ணில் பட்டவர்களை எல்லாம் கொடூரமாகத் தாக்கி அவர் கொலை செய்திருக்கிறார்.
அதிகாலை 2.30 முதல் 3.30 மணிக்குள் இந்தக் கொலையில் உயிரிழந்த ஆறு பேருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கொலை செய்த நபருக்கும் அவர்களோடு தொடர்பு கிடையாது. முதலில் மருத்துவமனை ஒன்றில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணைக் கொன்றுவிட்டுச் சென்ற அந்த நபர், ஆக்ரா சாலையில் இருந்து மினார் கேட் பகுதி வரை அடுத்தடுத்து ஐந்து பேரை கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளார்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த நபரை கைது செய்துள்ளனர். இதில், சில காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், கொலைகளில் ஈடுபட்ட நபர் இந்திய ராணுவத்தில் கேப்டனாக இருந்த நரேஷ் குமார் (வயது 35) என்பதும், தற்போது வேளாண்துறையில் அவர் பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது.
மனநலம் குன்றிய நிலையில் அவர் இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டார் என்பது தெரியவந்த நிலையில், அவர் தற்போது பரிதாபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.