கர்நாடகா மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. கர்நாடகத் தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சியினருக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. கர்நாடகாவில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள ராஜஸ்தான், தெலுங்கானா, மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலையும் கவனத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மத்தியப்பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்புரில் காங்கிரஸ் சார்பில் கடந்த 12 ஆம் தேதி பொதுக்கூட்டமும் பேரணியும் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். சிலர் பதவி ஆசைக்காக வேறு கட்சிக்கு தாவிச் சென்றுவிட்டனர் என ஜோதிராதித்ய சிந்தியாவின் பெயரைக் குறிப்பிடாமல் பேசினார். இதையடுத்து மத்தியப்பிரதேச மக்களுக்கு காங்கிரஸ் சார்பில் 6 வாக்குறுதிகளை பிரியங்கா காந்தி அளித்தார்.
இந்நிலையில் மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் அருண் யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பிரதமர் மோடி வரலாம். அவரை விட மூத்தவர்கள் யாராவது வரலாம். பாஜக தலைவர் நட்டா இங்கே வருவார். மோடியின் அப்பாவும் வேண்டுமானால் இங்கு வரலாம். அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் மத்தியப்பிரதேசத்தில் காங்கிரசுக்கு சாதகமான அலை வீசுகிறது. ஆட்சி மாற்றத்தை நாம் தெளிவாகக் காணலாம்" எனத் தெரிவித்துள்ளார்.