தமிழகம், கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்குவங்கம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக, டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் பங்கேற்றுள்ளார். அதேபோல். மற்ற மாநிலங்களைச் சேர்ந்த தேர்தல் அதிகாரிகளும் ஆலோசனையில் கலந்துகொண்டுள்ளனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை இறுதி செய்வது; எந்தெந்த மாநிலங்களில் எத்தனைக் கட்டங்களாக தேர்தல் நடத்துவது; பதற்றமான வாக்குச்சாவடிகள், தேர்தல் பணியாளர்களுக்குத் தடுப்பூசிப் போன்றவைப் பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி இறுதி செய்யப்பட்டு, மார்ச் முதல் வாரத்தில் தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் செய்தியாளர்களைச் சந்தித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் ஆணையத்தின் குழு, தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கும் சென்று அரசியல் கட்சியினர், தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.