தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தலுக்கான தேதிகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30 ஆம் தேதியும், மத்தியப் பிரதேச மாநிலத்தில் நவம்பர் 17 ஆம் தேதியும், மிசோரத்தில் நவம்பர் 7 ஆம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 25 ஆம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மேலும், சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் நவம்பர் 7 ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 17 ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளும் டிசம்பர் 3ம் தேதி வெளியாகும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் தேதிக்கு பிறகு அரசியல் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பணிகளை முன்னெடுத்துவருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி ஐந்து மாநிலத்திலும் தங்கள் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி தெலுங்கானா மாநிலத்தில் போட்டியிடும் 55 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தெலுங்கானா காங்கிரஸ் கட்சித் தலைவர் ரேவந்த் ரெட்டி, கொடங்கல் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சத்தீஸ்கர் மாநிலத்தில் 30 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், முதல்வர் பூபேஷ் பாகேல் படானிலும், துணை முதல்வர் டி.எஸ். சிங் தியோ அம்பிகாபூரிலும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் போட்டியிடும் 144 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியாகியுள்ளது. அதில், மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.