2022 -23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். பொதுவாக பட்ஜெட் தொடர்பான ஆவணங்களை அச்சிடும் பணி தொடங்கும்போது, பட்ஜெட் விவரங்கள் முன்கூட்டியே கசியாமல் இருக்க, பட்ஜெட் அச்சிடும் பணியில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படுவர். பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும்வரை வெளியுலகத்தோடு தொடர்புகொள்ள அனுமதி மறுக்கப்படும்.
அதேவேளையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படும் நாளில், மத்திய நிதியமைச்சகத்தில் அல்வா கிண்டப்பட்டு அது பட்ஜெட் தயாரிப்பில் பணியாற்றிய அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் வழங்கப்படும். மத்திய நிதியமைச்சர் இந்த அல்வா கிண்டும் நிகழ்ச்சியை தொடங்கி வைப்பார்.
இந்தநிலையில் இந்த அல்வா கிண்டும் நிகழ்ச்சி இந்தாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு நடைபெறும் அல்வா கிண்டும் நிகழ்ச்சி, ரத்து செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.