
பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்திய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், பிரபலங்கள் உளவு பார்க்கப்பட்டதாக கடந்த மாதம் வெளியான தகவல் பூதாகரமாகிய நிலையில், உளவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோரின் செல்ஃபோன் எண்களும் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியது.
இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மத்திய அரசிடம் கேள்வியெழுப்பி வந்தது. இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா, இந்த சதிக்குப் பின்னால் இருப்பது உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் என்றும், அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்த விஷயத்தில் பிரதமர் மோடியின் பங்கு குறித்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

அதனைத்தொடர்ந்து ஜூலை 19 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் பெகாஸஸ் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளையும் கேள்விகளையும் முன்வைத்தன. விளக்கம் தரக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை கடந்த 15 நாட்களாக முடக்கப்பட்டது. இந்நிலையில், பெகாஸஸ் விவகாரத்தில் இன்று மத்திய அரசு மாநிலங்களவை உறுப்பினர்களின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது. அதில், பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தும் இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை எனத் தெரிவித்துள்ளது.