கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் பலமுறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், மீண்டும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் குடியரசுத் தலைவரின் நடவடிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கி இருந்தது. அதே வேளையில், ஜம்மு - காஷ்மீரில் உள்ள பூஞ்ச் ரோஜரி பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், பாரமுல்லாவில் உள்ள மசூதியில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியும், மூன்று பொதுமக்களும் கொல்லப்பட்டனர். கடந்த ஒரு வாரத்தில் ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா இன்று (26-12-23) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நமது நண்பர்களை மாற்றிக்கொள்ளலாம். ஆனால், நமது அண்டை நாட்டினரை மாற்ற முடியாது என்றும், அண்டை நாடுகளுடன் நட்புறவில் இருந்தால்தான் இருநாடுகளும் வளர முடியும் என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறினார். அதேபோல், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மோடியும் தெரிவித்திருந்தார்.
இது மாதிரியான கருத்துக்கள் தெரிவிக்கின்ற போதிலும் இரு நாடுகளிடையே எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. பாகிஸ்தான், இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சொன்னார்கள். ஆனால், நாம் தயாராக இல்லாததற்கு என்ன காரணம்? காசா மீது இஸ்ரேல் தற்போது குண்டுகளை வீசித் தாக்குதலை நடத்தி வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாவிட்டால், காசா மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஏற்பட்ட அதே கதிதான் நமக்கும் ஏற்படும். அடுத்த காசாவாக ஜம்மு - காஷ்மீர் மாறிவிடும்” என்று கூறினார்.