Skip to main content

முடிவுக்கு வரும் விவசாயிகளின் போராட்டம்? 

Published on 07/12/2021 | Edited on 07/12/2021

 

farmers

 

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஒருவருடமாக விவசாயிகள், டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாகவும், புதிய வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்பப் பெற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நவம்பர் 19ஆம் தேதி அறிவித்தார்.

 

அதன்தொடர்ச்சியாக அண்மையில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்பட்டது. இருப்பினும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம், போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

 

இந்தநிலையில் மத்திய அரசு, விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்பதாக எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறைந்தபட்ச ஆதார விலை விவகாரத்தில் கமிட்டி அமைப்பதாகவும், விவசாயிகளுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் கை விடுவதாகவும், பயிர் கழிவுகள் எரித்ததற்காக பதியப்பட வழக்குகளைக் கைவிடுவதாகவும் உத்தரவாதத்தில் கூறப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக மத்திய அரசு, பஞ்சாப் அரசு தங்கள் மாநில விவசாயிகளுக்கு இழப்பீடு அளித்தது போல், உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தை சேர்ந்த உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது என மத்திய அரசு அந்த உத்தரவாதத்தில் கூறியுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறியுள்ளன.

 

அதேநேரத்தில் விவசாயிகளின் சில கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு தனது உத்தரவாத கடிதத்தில் எதுவும் கூறவில்லையென்றும், எனவே விவசாயிகள் போராட்டத்தை கை விடுவதா? வேண்டமா? என ஆலோசித்து வருவதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

 

 
 

சார்ந்த செய்திகள்