Skip to main content

ஆஷிஸ் மிஸ்ராவின் ஜாமினுக்கு எதிர்ப்பு - உச்சநீதிமன்றத்தை நாடிய பலியான விவசாயிகளின் குடும்பத்தினர்!

Published on 21/02/2022 | Edited on 21/02/2022

 

supreme court

 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், கடந்த ஆண்டு மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஆஷிஸ் மிஸ்ரா அந்த சமயத்தில் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் ஒருவரும் பாஜகவைச் சேர்ந்த மூவரும் உயிரிழந்தனர்.

 

இந்தநிலையில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் கீழ், இந்த விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக் குழு, ஆஷிஸ் மிஸ்ரா உள்பட 14 பேருக்கு எதிராக 5000 பக்க குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

 

இந்தச்சூழலில் அலகாபாத் உயர்நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி ஆஷிஸ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கியது. இதனை தொடர்ந்து  ஆஷிஸ் மிஸ்ரா சில நாட்களுக்கு முன்னர் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்தநிலையில் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து லக்கிம்பூரில் கார் ஏறியதில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினர்கள், உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

 

விவசாயிகளின் குடும்பத்தினர்கள் அந்த மனுவில், “குற்றத்தின் கொடூரமான தன்மை, குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான ஆதாரங்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் மீதான குற்றம் சாட்டப்பட்டவரின் நிலை, குற்றம் சாட்டப்பட்டவர் சட்டத்திலிருந்து தப்பிச் சென்று குற்றத்தைத் திரும்பச் செய்வதற்கான வாய்ப்பு, சாட்சிகளைக் கலைப்பதற்கான வாய்ப்பு ஆகியவற்றைக் கருத்தில்கொள்ளாமல் உயர்நீதிமன்றம் ஜாமின் தந்துவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்