விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்துவது என்பன உள்ளிட்ட 12 அம்ச வேளாண் கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் டிராக்டர்களில் உணவு, மருந்து பொருட்களுடன் ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தச் சென்றபோது மாநில எல்லையிலேயே முள்வேலிகள், தடுப்புக்கட்டைகள் அமைத்து தடுக்கப்பட்டனர்.
இந்த தடுப்புக்கட்டைகளைத் தகர்த்தெரிந்த விவசாயிகள் தடைகளை மீறி டெல்லி நோக்கி புறப்பட்டபோது விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் நிலைகுலையச் செய்தனர். மேலும் ரப்பர் குண்டுகளால் சுடப்பட்டனர். கண்ணீர் புகை குண்டுகளால் ஏற்பட்ட நச்சுப் புகையால் மூச்சுத் திணறிய 65 வயது கியான் சிங் என்ற விவசாயியும், ரப்பர் குண்டு பட்டுத் தலையில் காயமடைந்த 21 வயது இளம் விவசாயி ஒருவரும் போராட்டக் களத்திலேயே உயிரிழந்தனர். இதற்கிடையில் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. அதே சமயம் டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து விவசாயிகள் விரிவான ஆலோசனை செய்து வந்தனர்.
இந்நிலையில் மார்ச் 10 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் கூறுகையில், “டெல்லிக்கு பேரணியாக செல்லும் எங்கள் (விவசாயிகள்) திட்டம் அப்படியே உள்ளது. அதிலிருந்து நாங்கள் பின்வாங்கவில்லை. எல்லையில் பலத்தை அதிகரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 6 ஆம் தேதி விவசாயிகள் நாடு முழுவதிலும் இருந்து ரயில், பேருந்து, விமானம் மூலம் டெல்லிக்கு செல்ல திட்டமிட்டுள்ளோம். அங்கு போராட்டத்தில் கலந்துகொள்ள அரசு அனுமதிக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மார்ச் 10 ஆம் தேதி நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்துவோம். அன்றைய தினம் நன்பகல் 12 மணி முதல் மாலை முதல் 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்தார்.