மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள், இன்று நாடு முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். மேலும், மதியம் 12 மணியிலிருந்து மூன்று மணி வரை இந்தச் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, இன்று விவசாயிகள் பஞ்சாப், ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலம் ஏலகங்காவில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். இதேபோல் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் அழுத்தத்தோடு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என பாரதிய கிசான் யூனியன் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத், "வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசுக்கு அக்டோபர் 2 ஆம் தேதிவரை அவகாசம் அளித்துள்ளோம். அதன்பிறகு நாங்கள் மேற்கொண்டு முடிவெடுப்போம். அழுத்தத்தோடு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடமாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் டெல்லியின் சிங்கு, காசிபூர் மற்றும் டிக்ரி எல்லைகளில், இன்று இரவு 11.59-வரை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.