பெகாசஸ் ஹேக்கிங் விவகாரம் உலகம் முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் பெகாசஸ் விவகாரம் புயலைக் கிளப்பியுள்ளது. பெகாசஸ் விவகாரத்தைத் தீவிரமாக எழுப்பிவரும் எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற கூட்டத்தொடரைத் தொடர்ந்து முடக்கிவருகின்றனர்.
இந்தநிலையில் இன்று (23.07.2021) காலை மக்களவை கூடியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, மக்களவை 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு அவை கூடியதும், மீண்டும் எதிர்க்கட்சிகள் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டதுடன், பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, வரும் 26ஆம் தேதிவரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெகாசஸ் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.