மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று நடத்திய ட்ராக்டர் பேரணியின்போது வன்முறை வெடித்தது. செங்கோட்டையில் சீக்கியர்களின் புனிதக் கொடி ஏற்றப்பட்டது. இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக டெல்லி போலீசார் 20க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
இந்தநிலையில் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தி, விவசாயிகள் நாளை நாடு தழுவிய சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்தச் சாலை மறியல் போராட்டம் அமைதியான முறையில் நடைபெறுமென விவசாயச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில் விவசாயிகளின் நாடு தழுவிய சாலை மறியல் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய ட்ராக்டர் பேரணிக்குப் பிறகு, விவசாயிகள் நடத்தும் மிகப்பெரிய போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.