ஃபானி புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் புதுச்சேரி தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமை செயலர் அஸ்வினிகுமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்தின் பின் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "ஃபானி புயலால் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது புயல் காற்று 90 முதல் 100 கி.மீட்டர் வேகத்தில் வீசும் என்றும், 20 செ.மீ. மழை பெய்யும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து துறைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை துறைகளுடன் முக்கிய துறைகளின் கட்டுப்பாட்டு அறைகள் முழு வீச்சில் செயல்படும். விடுப்பில் சென்ற ஊழியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. புயலுக்கு முன்பாகவும், புயல் பாதித்தாலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது" என்றார்.