Skip to main content

போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த இளைஞர்; காத்திருந்து அவமானப்படுத்திய கிராம மக்கள்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 The family was dragged in a procession wearing sandal garlands and Youth arrested in POCSO case

கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டம், தொட்டவாடா கிராமத்தில் ஒரு தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு, 18 வயதுக்குட்பட்ட ஒரு மகள் இருக்கிறார். அந்த சிறுமி, அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த அணில் மூக்னாவர் என்ற வாலிபர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, அந்த சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து, அந்த சிறுமி தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், பைலேஒங்கலா புறநகர் போலீசார், வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்தனர். அதன் பின்னர், அந்த வாலிபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஹிண்டல்கா சிறையில் அடைத்த்னார். 4 மாதங்களாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை சில தினங்களுக்கு முன்பு, வாலிபருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 

இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டிருந்த வாலிபர் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்து தனது கிராமத்திற்கு திரும்பியுள்ளார். அப்போது, வாலிபர் கிராமத்திற்குள் வந்ததை அறிந்த சிறுமியின் குடும்பத்தினரும், உறவினர்களும் அவரை செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக இழுத்து சென்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், சிறுமியின் குடும்பத்தினர் வாலிபரின் கையை துணியால் கட்டி செருப்பால் அடித்தும், அவருக்கு செருப்பு மாலை அணிவித்தும் கிராமத்திற்குள் ஊர்வலமாக இழுத்து வருகின்றனர். அவர்களோடு, அந்த கிராம மக்களும் உடன் வருகின்றனர். இதனை அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவர், தங்கள் செல்போன்களில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. 

சார்ந்த செய்திகள்