இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, டெல்லி, மஹாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மத்திய அரசும் மாநிலங்களுக்கு தேவையான கரோனா தடுப்பூசிகள், ஆக்சிஜன் போன்றவைகளை விமானங்கள் மூலமும், ரயில்கள் மூலமும் அனுப்பி வைத்து வருகிறது.
அதேபோல் மறுபுறம் ரெம்டெசிவிர் மருந்துக்கும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்றவர்கள் மற்றும் விற்க முயன்றவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்கப்படுவது மட்டுமல்லாமல் போலியாக ரெம்டெசிவிர் மருந்துகள் தயாரிக்கப்படுவது தொடர்பான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்ரகாண்ட்டில் ரெம்டெசிவிர் மருந்துகள் போலியாக தயாரித்து விற்கப்பட்டது தொடர்பான புகாரில் டெல்லியில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து போலியாக ரெம்டெசிவிரை தயாரிக்க பயன்படுத்திய மூலப்பொருட்களும், லேபிள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஹரியானா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் போலி ரெம்டெசிவிர் மருந்துகளை விற்றது தெரியவந்துள்ளது.