மேற்கு வங்க எம்.பி. மஹூவா மொய்த்ரா, அதானி குழுமம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனியிடம் லஞ்சம் பெற்றதாக பா.ஜ.க எம்.பி. நிஷாகாந்த் துபே, கடந்த 16 ஆம் தேதி மக்களைவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இது குறித்து அவர் எழுதிய அந்தக் கடிதத்தில், “மஹூவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்கு தொழிலதிபரான ஹிரானந்தனிடம் இருந்து பணம் பெற்றுள்ளார். ஹிரானந்தனி நிறுவனம், தனது நிறுவனத்தின் ஆற்றல் மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவற்றை அதானி நிறுவனத்திடம் இழந்துள்ளது. அதனால், மொய்த்ராவின் கேள்விகள் அனைத்தும் ஹிரானந்தனி நலனுக்காக தான் இருந்திருக்கிறது. இதற்காக ரூ.2 கோடி பணம் மற்றும் விலை உயர்ந்த ஐ ஃபோன் போன்ற பரிசு பொருட்களை ஹிரானந்தனி நிறுவனம் மொய்த்ராவுக்கு தந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், தேர்தலில் போட்டியிடுவதற்காக ரூ. 75 லட்சம் மொய்த்ராவுக்கு, ஹிரானந்தனி நிறுவனம் கொடுத்துள்ளது.
கடந்த 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் மொய்த்ரா நாடாளுமன்றத்தில் 61 கேள்வி கேட்டுள்ளார். அதில் 50 கேள்விகள் தர்ஷன் ஹிரானந்தனிக்கு சாதகமான கேள்விகளே கேட்கப்பட்டுள்ளது. எனவே, அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணை குழு அமைக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, பா.ஜ.க எம்.பி. வைத்துள்ள குற்றச்சாட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மொய்த்ரா திட்டவட்டமாக மறுத்திருந்தார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு, நவம்பர் 2 ஆம் தேதி மொய்த்ராவை நேரில் வந்து ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், அரசாங்கம் தனது செல்போன் மற்றும் மின்னஞ்சலை ஹேக் செய்ய முயற்சி செய்து வருகிறது என்று மஹூவா மொய்த்ரா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து மொய்த்ரா, தனது எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “எனது தொலைப்பேசி மற்றும் மின்னஞ்சலை அரசாங்கம் ஹேக் செய்ய முயற்சிப்பதாக ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து எனக்கு எச்சரிக்கை மின்னஞ்சல் வந்துள்ளது. அதானி மற்றும் பி.எம்.ஓ. நபர்களின் பயத்தை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன். சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, எனக்கு மற்றும் இந்தியா கூட்டணியின் மூன்று தலைவர்களுக்கும் இதுபோன்ற எச்சரிக்கை வந்துள்ளது” என்று தெரிவித்தார். இது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Received text & email from Apple warning me Govt trying to hack into my phone & email. @HMOIndia - get a life. Adani & PMO bullies - your fear makes me pity you. @priyankac19 - you, I , & 3 other INDIAns have got it so far . pic.twitter.com/2dPgv14xC0— Mahua Moitra (@MahuaMoitra) October 31, 2023