கல்வியும் அதன் வழியிலான பொருளாதார முன்னேற்றமும் குழந்தைத் திருமணத்தைக் கட்டுப்படுத்தி இருந்தாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக, வட மாநிலங்களில் இதற்கு பஞ்சமே கிடையாது. ஆனால், அதற்கெதிராக அனைவரும் களமிறங்கி குழந்தைகளின் எதிர்காலத்தைக் காக்கவேண்டும் என்று முழக்கமிடுகிறார் அசாமைச் சேர்ந்த தனி ஒருவன்!
சிக்கிம் மணிப்பால் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. முடித்த யாரும் இந்தியாவின் பெருநகரம் ஒன்றில் இயங்கிவரும், பன்னாட்டு நிறுவனத்தில் வேலைபார்த்துக் கொண்டு ராஜ வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருப்பார்கள். ஆனால், அசாம் மாநிலம் துப்ரி மாவட்டம் தெற்கு தோக்ரெகோரா கிராமத்தைச் சேர்ந்த இலியாஸ் ரகுமான், குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்காக தன் வாழ்க்கையையே அற்பணித்திருக்கிறார்.
துப்ரி மாவட்டம் வங்கதேசத்தின் எல்லைப்புறத்தை நெருங்கிய பகுதி. இங்கு வங்காளம் பேசும் இஸ்லாமியர்கள் மற்றும் படிப்பறிவில்லாத ஏழை குடும்பங்களைச் சேர்ந்தோர் ஏராளமானோர் வசிக்கின்றனர். இவர்களில் பலர் தங்கள் குழந்தைகளை 12 - 13 வயதே நிரம்பியிருந்தாலும், குடும்பச் சூழலைக் காரணம்காட்டி திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இதனால், குடும்ப வாழ்க்கை பற்றிய புரிதல் இல்லாத அக்குழந்தைகள், பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு கையாள முடியாமல் உடல்நலக் குறைவு, பிரச்சனைகளைச் சந்திப்பதோடு, இறுதியில் அந்த திருமண உறவு விவாகரத்தில் முடிகிறது.
இலியாஸ் ரகுமான், 2015ல் 13 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கப்படுவதாகக் கேள்விப்பட்டு, அதைத் தடுப்பதற்காக சிறுமியின் குடும்பத்தினரிடம் பேசியிருக்கிறார். ஆனால், அவர்கள் ரகுமானின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். அடுத்த சில தினங்களில் 12 வயது சிறுமிக்கும், 14 வயது சிறுவனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டு போய் பார்த்தபோது, அவர்களின் குடும்பப் பிரச்சனையில் மூக்கை நுழைக்காதே எனக்கூறி விரட்டிவிட்டனர். மனம் தளராத இலியாஸ் காவல்துறை உதவியோடு அந்தத் திருமணத்தை நிறுத்தினார்.
இன்றும், முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூகஊடகங்களில் குழுக்களை உருவாக்கி, அதில் வரும் புகார்களின் மூலம் சம்மந்தப்பட்ட பெற்றோரிடம் நேரில் சென்று பேசுகிறார் இலியாஸ். பலர் உண்மை நிலையைப் புரிந்துகொண்டு ஏற்றுவிடுகின்றனர். சிலர் முரண்டு பிடித்தால் காவல்துறை மற்றும் குழந்தைகள் நல ஆணையத்திடம் புகார் கொடுத்து திருமணத்தை நிறுத்துகிறார். இப்படி, இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்களை இலியாஸ் தடுத்து நிறுத்தி இருக்கிறார். இதனால், பலமுறை இவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருப்பதாக குழந்தைகள் நல ஆணையர் தெரிவித்திருக்கிறார்.
கல்வி நிலையங்களின் பற்றாக்குறையும், குடும்பங்களின் பொருளாதார சூழலும் குழந்தைத் திருமணத்திற்குக் காரணமாகி, அவர்களின் எதிர்காலத்தையே பாழாக்கி விடுகின்றன. குழந்தைத் திருமணம் முற்றிலும் ஒழிந்துபோகும் வரை எனது பயணம் ஓயாது என்கிறார் இலியாஸ்!