இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று (15.10.2021) குஜராத் மாநிலம் சூரத்தில் சவுராஷ்ட்ரா பட்டேல் சேவா சமாஜின் சார்பாக கட்டப்படும் ஆண்கள் விடுதியின் பூமி பூஜையில் காணொளி வாயிலாக கலந்துகொண்டு, ஆண்கள் விடுதிக்கு அடிக்கல் நாட்டினார்.
அதனைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, எந்தவிதமான அரசியல், வம்சாவளி பின்னணியின்றி தான் முதல்வர் மற்றும் பிரதமரானதாக கூறியுள்ளார் இதுதொடர்பாக அவர், "எந்தவித வம்சாவளி பின்னணி, அரசியல் பின்னணி மற்றும் சாதி பின்னணியும் இல்லாமல், மாநிலத்திலும் பின்பு நாட்டிலும் உள்ள மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன்" என கூறியுள்ளார்.
மேலும் அவர், "சாதிகள் மற்றும் மத நம்பிக்கைகள் எங்களுக்கு இடையூறாக மாறவிடக்கூடாது என்று சர்தார் படேல் கூறினார். நாம் அனைவரும் இந்தியாவின் மகன்கள் மற்றும் மகள்கள். நாம் அனைவரும் நம் நாட்டை நேசிக்க வேண்டும். நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும்" எனவும் தெரிவித்தார்.