வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான் இந்திய ஜனநாயகத்துக்கான தத்துவம். ஆனால் ஒற்றுமையை உருக்குலைத்து வேற்றுமை பேசி, பிரிவினையை வளர்ப்பதுதான் மதவிரோதம் பேசுபவர்களின் இலக்கு.
அத்தகைய குரல்கள் இந்தியாவில் பெருகிவருவதுதான் கவலைதரும் அம்சம்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.யான ஹரி ஓம் பாண்டே, இந்தியாவில் பாலியல் குற்றங்கள், கொலைகள், கும்பல்களால் தாக்கிக் கொலைசெய்யப்படுவது அதிகரிப்பதற்கு முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரிப்பதுதான் காரணமெனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “இஸ்லாமிய மதத்தலைவர்கள், இஸ்லாமியர்களிடம் நமது மதம் கருத்தடையை ஆதரிப்பதில்லையென தொடர்ந்துகூறிவருகிறார்கள். கடுமையான சட்டம்கொண்டு முஸ்லிம்களின் மக்கள்தொகை அதிகரிப்பதைத் தடுக்காவிட்டால், இந்தியா இன்னொரு பாகிஸ்தானாகிவிடும்” என சர்ச்சையைத் தூண்டும்விதத்தில் பேசியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்புதான் உ.பி.யின் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் சுரேந்திர சிங், “குடும்பக் கட்டுப்பாட்டில் சமநிலை இல்லையென்றால் இந்துக்கள் இந்தியாவிலேயே சிறுபான்மையினர் ஆகிவிடுவார்கள். அதனால் ஒவ்வொரு இந்துவும் ஐந்து குழந்தைகள் பெற்றுக்கொள்ளவேண்டும்” என்றார்.
உண்மையில் இந்தியாவில் இந்துக்கள் எண்ணிக்கை குறைந்து முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறதா?
1991-2001 காலகட்டத்தில் முஸ்லிம் ஜனத்தொகையின் ஆண்டு வளர்ச்சி 2.6 சதவிகிதமாக இருந்தது, 2001-2011 காலகட்டத்தில் 2.2 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. மாறாக இந்தக் காலகட்டத்தில் இந்துக்களின் ஜனத்தொகை ஒப்பீட்டளவில் சற்று அதிகரித்துள்ளது என்பதுதான் உண்மை.