2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர்.
இதற்கிடையே, வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் பல்வேறு முடிவுகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநில பொறுப்பாளர் பதவியில் இருந்த பலரை மாற்றி புதிய மாநில பொறுப்பாளர்களை அறிவித்தன. இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் புதிய தேசியத் தலைவராக, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பதவி ஏற்றுள்ளார்.
பீகார் மாநிலத்தில் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவராகப் பதவி வகித்தவர் லாலன் சிங். இந்த நிலையில், டெல்லியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, தேசியத் தலைவராகப் பொறுப்பு வகித்த லாலன் சிங் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார். எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த விரும்புவதால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக லாலன் சிங் தெரிவித்துள்ளார். அதனையொட்டி, அவரது ராஜினாமா கடிதத்தை செயற்குழு கூட்டத்தில் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் புதிய தேசியத் தலைவராக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதனையொட்டி, கட்சியின் தேசியத் தலைவர் பதவியை நிதிஷ்குமார் இன்று (29-12-23) ஏற்றுக்கொண்டார். ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் பதவியை லாலன் சிங் ராஜினாமா செய்யவுள்ளதாக கடந்த சில நாட்களாகச் செய்தி வெளியான நிலையில், இந்த அறிவிப்பு தற்போது வந்துள்ளது. மேலும், அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தலையும், அதற்கு அடுத்த ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில், கட்சியின் தலைமைப் பொறுப்பை நிதிஷ்குமார் ஏற்றுக்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.