உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. அதன்படி பஞ்சாப் மாநிலத்தில், பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரேகட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்தநிலையில், குரு ரவிதாஸின் பிறந்தநாள் விழா பிப்ரவரி 16 ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, அவர் பிறந்த இடமான உத்தரப்பிரதேச மாநிலம் பனராஸுக்கு, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுமார் 20 லட்சம் பட்டியலினத்தவர்கள் பிப்ரவரி 10 மற்றும் 16 ஆம் தேதிகளுக்கு இடையே பயணம் மேற்கொள்வார்கள் என்பதால், பஞ்சாப் சட்டமன்ற தேர்தலை தள்ளிவைக்க வேண்டுமென அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார்.
அதனைத்தொடர்ந்து பாஜக, பஞ்சாப் லோக் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும், தேர்தலை தள்ளி வைக்கவேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்தன. இந்தச்சூழலில் தேர்தலை தள்ளி வைப்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.