ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சில இடங்களில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கடந்த சில தினங்கள் முன் துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் தற்போதுவரை 45 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகினர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் சிந்தலபாலம், மேலச்செருவு உள்ளிட்ட கிராமங்களில் நேற்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் பல்நாடு ஆகிய மாவட்டங்களிலும் நந்திகிராம், கஞ்சிக செர்லா, சந்தர்ல பாடு, வீரபாடு மண்டலங்களிலும், பல்நாடு மாவட்டத்தில் அச்சம்பேட்டை, மாபாடு, சல்லக்கா கிஞ்ச பள்ளி, பளி சந்தலை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பல கிராமங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நில நடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கிருஷ்ணா நதியை ஒட்டிய பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் நாளில் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள புளிஞ்சிட்டாலா கிராமத்தில் 4.7 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானதும் குறிப்பிடத்தக்கது.