தலை நிற்காத போதையில் தந்தை ஒருவர் இரு கைக்குழந்தைகளுடன் காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த நிலையில் உணவின்றித் தவித்த குழந்தைகள் இருவரும் காவல்துறையினரால் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.
கேரள மாநிலம் பெருவாவூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இரு கைக்குழந்தைகளோடு கொடநாடு காவல் நிலையத்திற்கு வந்தார். மனநலம் பாதிக்கப்பட்டதைப் போல் காவல்துறையினரிடம் நடந்துகொண்ட அவரைப்பற்றி விசாரித்தபோது, அஸ்வின் என்ற அந்த நபர் மது போதைக்கு அடிமையானவர் என்பதும், அவருடைய கொடுமை தாங்காமல் அவரது மனைவி குழந்தைகளை விட்டுச் சென்றுவிட்டதும் தெரிய வந்தது. காவல் நிலையத்திலிருந்த இரண்டு கைக்குழந்தைகளும் பசியில் அழுதன. இதனால் அங்கிருந்த காவலர்கள் குழந்தைகளுக்கு பால், சாப்பாடு வாங்கிக் கொடுத்ததோடு இரண்டு குழந்தைகளையும், குழந்தைகள் நலக் காப்பகத்தில் சேர்த்தனர். மேலும் போதைக்கு அடிமையான தந்தை அஸ்வினை போதை மீட்பு மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.