குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரௌபதி முர்மு வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தேர்தல் அதிகாரி வெளியிட்டார். திரௌபதி முர்முவுக்கு 2,824 வாக்குகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவராக 5,28,491 மதிப்பு வாக்குகளே தேவை என்ற நிலையில், திரௌபதி முர்முவுக்கு 6,76,803 மதிப்பு வாக்குகள் கிடைத்துள்ளது.
வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து, நாட்டின் 15- வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்கவுள்ளார். அவருக்கு தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.