கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கோட்டயபுரம் நகரில் வசித்து வருபவர் வர்கீஸ் ஓம்மன். சுற்றுலா ஏற்பாடு செய்யும் வேலை செய்துவரும் இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன் தெருநாய் ஒன்றை தனது குடியிருப்புக்கு அழைத்து வந்துள்ளார். அதற்கு ஷேடோ எனப் பெயர் வைத்துள்ள வர்கீஸ் தினமும் உணவு அளித்து அதைப் பாதுகாப்பாக வளர்த்து வருகிறார். இந்நிலையில் சுற்றுலா தொடர்பான விஷயங்களுக்காக வெளியூர் செல்வது, குடும்பத்தினருடன் வெளியே செல்வது போன்ற நேரங்களில் அவரால் ஷேடோவுக்கு உணவு வழங்க முடியாமல் போயுள்ளது. இதை நினைத்து வருந்திய வர்கீஸ் அதற்கு ஒரு தீர்வையும் கண்டுபிடித்துள்ளார். தான் வெளியூர் செல்லும் நேரங்களில் எல்லாம் ஆன்லைனில் ஷேடோவுக்கு உணவு ஆர்டர் செய்து விடுகிறார்.
இதுகுறித்து பேசியுள்ள வர்கீஸ், " வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் ஷேடோவுக்கு உணவு அளிக்க முடியவில்லை என்பது வருத்தமாக இருந்து வந்தது. அதனால் ஆன்லைனில் ஷேடோவின் பெயரில் ஒரு கணக்கு தொடங்கி, நான் ஊரில் இல்லாத நேரங்களில் அதில் அதற்கு உணவு ஆர்டர் செய்து வருகிறேன். டெலிவரி பாயிடம் ஷேடோ எங்கு இருக்கும் எனக் கூறி விட்டால் அவர் அங்கு சென்று உணவை டெலிவரி செய்து விடுவார். அதை அபார்ட்மென்ட் காவலர் ராதாகிருஷ்ணன் பிரித்து ஷேடோவுக்கு கொடுத்து விடுவார். அது உணவை சாப்பிட்டுவிட்டு சென்றுவிடும்" எனக் கூறியுள்ளார்.